
பேராசிரியை வசந்தி தேவி.
தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவர். திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.
மனிதனை மனிதன் விழுங்குகின்ற ஒரு போட்டி உலகத்திற்குள்ளாக மாணவர்களை நாம் இன்று தள்ளி வருகின்றோம். அதில்
ஏற்படும் பலவகையான மன உளைச்சல்கள், வணிக கலாச்சாரம் இதனால் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளால் தான் இத்தகைய சம்பவங்கள் உருவாகின்றன.ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையேயான உறவுகள் முற்றிலும் உடைந்து விட்டது. அவ்வாறான உறவுகளை உடைத்து விட்ட கலாச்சாரச் சூழலில் இதுபோன்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய சம்பவம் ஒன்று ஏதேனும் நடைபெறும் போது மட்டும்தான் நாம் அவற்றைப் பற்றி கவலைப்படுகின்றோம்.. அதன் பின்னர் அதை மறந்து விடுகின்றோம்.
ஊடகங்கள், மாணவர்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளன. அவற்றை அக்கறையுடன் பெற்றோர்,- ஆசிரியர் மற்றும் சமுதாயமும் கவனிக்க வேண்டும். இணையதளங்களுக்கு சென்சார் கூடாது என்ற கருத்து இன்று வலுப்பட்டு வருகின்றது. வசதி படைத்த மாணவன் தனி அறையில் பூட்டிக்கொண்டு சிறுவயதில் இருந்தே இணையத்தில் உலவ ஆரம்பித்து விடுகிறான். அப்போதே குடும்பத்துடனான அந்த மாணவனின் உறவு பாதிப்படையத் துவங்கி விடுகின்றது. நண்பர்களுடன் நெருங்கிப் பழகுகிற, மனம்விட்டுப் பேசுகின்ற போக்கு எல்லாம் இன்று மாறி விட்டன.
முன்பெல்லாம் மாணவர்களுக்குள்ளே கலந்தாய்வு வகுப்புகள் நடைபெறும். ஆனால் அத்தகைய முறைகள் எல்லாம் இன்று சுத்தமாக மறைந்து விட்டன. நல்ல மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு இன்று குறைந்து விட்டது. மாணவர்கள் டியுசன் போவது, கோச்சிங் கிளாஸ் போவது என ஆசிரியர் மாணவர்களிடையே கூட ஒற்றுதல் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலை மாற வேண்டும். கல்வியின் உள்ளடக்கத்திற்கும், கல்வி எத்தகைய மதிப்பீடுகளை உருவாக்குகின்றது என்பதும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். குழந்தைகளை மனிதனாக ஆக்குகின்ற கல்வியை நாம் கொடுக்கவில்லை. மாறாக பெற்றோர்களும் பள்ளிகளும் கார்ப்ரேட் கண்ணோட்டத்தில் தான் மாணவர்களை நாம் புரோகிராம் பண்ணிக் கொண்டிருக்கின்றோம். இம்மாதிரியான கல்வி தன் பொருளையே இழந்துவிடும். இது கல்வி அமைப்புக்கு மட்டும் அல்ல சமுதாயத்திலும் ஏற்பட்டுள்ள சீரழிவு. ஒரு கொடுமையான போட்டி உலகத்திற்குள்ளாக மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். இன்றைய கல்வி அமைப்பு, கல்வியின் உள்ளடக்கத்தைப் பற்றி நிறைய சிந்திக்க வேண்டும். கல்வி நிலையங்கள் முற்றிலும் மாற்றி அமைக்கப் படவேண்டும். உறவுகளை உடைக்கின்ற கல்வியை தான் இன்று நாம் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். உறவுகளை உண்டாக்கக்கூடிய கல்வி தான் தேவை என்கிறார் பேராசிரியை வசந்தி தேவி.
இன்குலாப்
இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகர சிந்தனையை வாழ்க்கையாகவே வரித்துக்கொண்ட இவர், பெயரையே இன்குலாப் எனப் புனைந்து கொண்டார். 30 ஆண்டுகள் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
நம்முடைய திரைப்படங்கள் இதர பண்பாட்டு ஊடகங்கள் வலிமையாக இளம் உள்ளங்களை பாதித்துள்ளன. பொறுப்பற்ற வகையில் காட்சிகளை அமைப்பதைத் தான் நாம் இன்றைய திரைப்படங்களில் காண்கின்றோம். குறிப்பாக பெற்றோர்களை, ஆசிரியர்களை "அவன் வந்துட்டான் போயிட்டான்" என்று இழிவாகப் பேசக்கூடிய வசனங்கள் திரைப்படங்களில் வருகின்றன. அனைவரையும் மரியாதையுடனும், மனிதநேயத்துடனும் பார்க்க வேண்டும் என்பதையே இந்த திரைப்படங்கள் சிதைக்கின்றன.
இன்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவுகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். மாணவ-&ஆசிரியர்களின் உறவை பாசம் கலந்த ஒன்றாக உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருக்குமேயானால் அதை சரி செய்ய வேண்டும். ஆசான் என்றால் அதிகாரப் போக்கு என்பது தவறு. ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் மனிதநேயமும், ஜனநாயகமும் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்'' என்றார் இன்குலாப்.
பேரா. முனைவர். ராமு மணிவண்ணன்.
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இயற்கையுடன் இணைந்த இலவசக் கல்வியை வேலூர் மாவட்டத்தில் வழங்கி வருபவர். ''இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதை விட, மிகவும் வருந்தத்தக்க செயலாகும். எந்தளவிற்கு சினிமா போன்ற ஊடகக் கலாச்சாரச் சீரழிவுகளினால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு கொலை செய்யும் அளவிற்கு அது தூண்டியுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். நமது பள்ளி சூழ்நிலைகளில் ஆசிரியர் என்றால் பயம் என்ற உணர்வு கூட வெறிச்செயலுக்கு காரணமாக இருக்கின்றது. மேலைநாடுகளில், பள்ளிகளில் மாணவ - ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசகர்களை நியமித்து இருப்பார்கள். அதுபோல ஆலோசகர்களை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நியமிக்க வேண்டும்'' என்றார்.
அ. மார்க்ஸ்
37 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆசிரியர் இயக்கங்களில் பல்வேறு மட்டங்களிலும் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டு வருபவர். "இந்த சம்பவங்களுக்கு ஒட்டுமொத்த சமூகமும் தான் பொறுப்பேற்க வேண்டும். நமது வாழ்க்கையில் அரசியலில் ஊடகங்களில் வன்முறை என்பது மிகப்பெரிய அளவில் பெருகி இருக்கின்றது. இது இளம் உள்ளங்களில் இதுபோன்ற முயற்சிகளுக்கு உந்துதலாக அமைந்துள்ளது. ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில், எந்தப் பள்ளியிலும் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே கூடுதலான வேலைப் பணிகளை அவர்கள் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதன்மூலம் பொறுமையிழந்து மாணவர்களிடையே கோபமாக நடந்து கொள்ளும் வாய்ப்பு அதிகமாக விடுகின்றன. இந்தச் சூழலில் மாணவர்கள் இதுபோன்ற நிலை எடுப்பது என்பதற்கான சமூகப் பின்னணிகளை ஆராய்ந்து, அதைத் தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். வயது வந்த மாணவர்களை மற்ற மாணவர்கள் முன் அவமானப்படுத்துவது, அவர்களை கோபமூட்டக் கூடிய அளவிற்கு நடந்து கொள்வதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய அமைதியான சூழலை ஏற்படுத்தி தரவேண்டிய பொறுப்பு அரசிற்கு இருக்கின்றது. சினிமா மற்றும் இதர ஊடக தொடர்பு சாதனங்கள் வன்முறையை உண்டாக்கக் கூடிய படைப்புகளை வெளியிடக் கூடாது. இதுபோன்ற தொலைநோக்கிலான நடவடிக்கை மூலமாகத் தான் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும்'' என்றார் பேரா. மார்க்ஸ்.
No comments:
Post a Comment