பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது, அரும்பாவூரைச் சேர்ந்த யுரேஷா பேகம் ஆகியோருக்கு இஸ்லாமிய முறைப்படி கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெறவிருந்த திருமணத்தை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி ஷரியத் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுவரும் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது, ஆர்டிஓ ரேவதி மற்றும் சமூக நலத்துறை அலுவலர் பேச்சியம்மாள் ஆகியோரைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 17.07.12 அன்று பெரம்பலூர் பேருந்து நிலையம் எதிரிலுள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் மவ்லவி ஏ.இ.எம் அப்துர் ரஹ்மான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் எஸ். ஹைதர் அலி, இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் எஸ்.எம்.பாக்கர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இஸ்மாயில் உள்பட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் பங்கேற்றனர்.
தமுமுக தலைவர் ஹைதர் அலி பேசும்போது சுப்ரீம் கோர்டே கூறிவிட்டது முஸ்லிம்களின் திருமண வயது 15 என்று அதனால் முஸ்லிம்கள் யாரும் 15 வயதிற்கு மேற்பட்டோர்களின் திருமணத்திற்காக பயப்படவேண்டாம். உங்களுக்கு பயமிருந்தால் இந்த கூட்டமைப்பை அழையுங்கள் எங்கள் சார்பாக 15வயது முதல் 18வயது வரை உள்ள முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்றார். இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், ஷரியத் சட்டத்தைக் காக்க முஸ்லிம்கள் எதையும் செய்வார்கள் என்றார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, சேலம், கடலூர், பண்ருட்டி, லால்பேட்டை, வேலூர் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் கூடினார்கள். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்வது பெரம்பலூருக்கு இதுவே முதல்முறை என்பதால் பெரம்பலூர் பேருந்து நிலைய பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக விடுக்கப்பட்ட கோரிக்கைகள் :
1.ஷரியத் சட்டத்திற்கு எதிராக எந்த அதிகாரிகள் செயல்பட்டாலும் இந்த கூட்டமைப்பு போர்க்குரல் கொடுக்கும்.
2.முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
3.காப்பத்திலுள்ள மணப்பெண் யுரேஷா பேகம் மற்றும் சிறையிலுள்ள மணமகன் சாகுல் ஹமீது ஆகியோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
4. 15-18 வயது வரை யாருக்கேனும் திருமணம் செய்யவேண்டுமானால் இந்த கூட்டமைப்பு வைக்கும்.


No comments:
Post a Comment