TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Friday 16 December 2011

முல்லை பெரியாறு அணை விவகாரம்-சட்டபேரவையில் மமக தலைவர் ஆற்றிய உரை

தமிழக சட்டப்பேரவையில் 15.12.2011 அன்று முல்லைப் பெரியாறு தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அரசு கொண்டு வந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பங்குக் கொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரை:
 பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏழு கோடி தமிழக மக்களின் உள்ளக்கிடக்கையை
வெளிப்படுத்தும் வகையில் தமிழக சட்டப்பேரவையின் இந்தச் சிறப்புக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நான்கு அம்சங்கள் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான தீர்மானத்தை முன்மொழிந்ததற்காக முதலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் கூட வீணாக கடலில் போய் சேரும் 1500 டி.எம்.சி. தண்ணீரை மக்கள் பயன்பாட்டிற்காக நாம் முற்றிலும் பயன்படுத்த முடியவில்லை. ஆனால், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு 1789ல் இராமநாதபுரத்தின் முத்து ராமலிங்க சேதுபதி மண்ணரின் உத்தரவின் பேரில் அவரது தலைமை அமைச்சராக இருந்த முத்துஇருளப்ப பிள்ளை, அரபிக் கடலில் வீணாக கலக்கும் ஆற்று நீரை தடுத்து நிறுத்தி பாசனத்திற்காக பயன்படுத்துவது குறித்து ஆய்வுகளைச் செய்து திட்டங்களை வடிவமைத்தார். ஆனால் பொருளாதார பிரச்வனையின் காரணமாக அதற்கு செயல்வடிவம் கொடுக்க இயலவில்லை. பின்னர்  ஆங்கிலேய இராணுவப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக் இதற்கு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தில், சிவகிரியில் தொடங்கி முல்லை ஆற்றுடன் இணைந்து பிறகு பெரிய ஆறாக கேரளாவில் பெருக்கெடுத்து அரபிக் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை வறட்சியின் காரணமாக வாடி நிற்கும் தென் தமிழகத்திற்கு பயன்தரும் வகையில் முல்லை பெரியாறு அணையை தனது மணைவியின் நகைகளை கூட விற்று பென்னி குயிக் கட்டி முடித்தார்.

முல்லை பெரியார் அணையை கட்டும் பணியில் ஈடுபட்ட 483 தொழிலாளர்கள் மர்மக் காய்ச்சலுக்கு பலியானார்கள். மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கட்டப்பட்ட இந்த அணையை உலகமே வியப்புடன் பார்த்தது.  "This is one of the most extraordinary feats of engineering ever performed by man" மனிதனால் நிறைவேற்றப்பட்ட அசாதாரணமான பொறியியல் சாதனைகளில் முல்லைப் பெரியாறு அணையும் ஒன்று என்று The Institute of Royal Engineers நிறுவனம் வெளியிட்டுள்ளThe Military Engineer in India vol 11ல் லெப்டினென்ட் கர்னல் சான்டஸ் குறிப்பிட்டுள்ளார். ரூ84.71 லட்சம் மூலதனச் செலவுடன் 116 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பலம் வாய்ந்த அணையை ரூ40 கோடி செலவில் இடிப்போம் என்று கேரள அரசு கூறிவருவது இந்திய ஒருமைப்பாட்டிற்கு வைக்கப்படும் பேரிடியாகும்.

முல்லைப் பெரியார் அணையை இடித்து விட்டு புதிய அணையை கட்டி தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை தருவோம் என்று கேரளா அரசு சார்பில் தெரிவிக்கப்படும் கருத்து ஒரு ஏமாற்று வித்தையாகும். முல்லைப் பெரியாறு அணை, பெரியாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட ஒரு தடுப்புச் சுவரே ஆகும். இதிலிருந்து தேக்கடி மதகு வாயிலாக சுரங்கப் பாதை வாயிலாக தமிழகத்திற்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகின்றது.  முல்லை பெரியாறு அனையின் நீர் மட்டம் 104 அடிக்கு மேலேச் சென்றால் தான் அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். புதிதாக கட்டப் போவதாக சொல்லப்படும் அணை, பெரியாறு அணையிலிருந்து 350 மீட்டர் கீழ்பகுதியில் அமைய போகின்றது. புதிய அணையின் மட்டம் பெரியாறு அணையை விட 50 அடி குறைவு. எனவே புதிய அணையில் தண்ணீர் மட்டம் 150 அடிக்கு மேலே சென்றால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் எடுக்க இயலும். ஆனால் இதற்கு வழியே இல்லை. ஏனெனில் அவர்கள் கட்டப்போகும் அணையின் உயரமே 140 அடிதான். ஆனால், இந்தப் புதிய அணையைக் கட்டுவதற்கான உத்தரவு ஏதும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்காத சூழ்நிலையிலே, சில ஆண்டுகளுக்கு முன்னால், புதிய அணையைக் கட்டுவதாக சொல்லப்படக்கூடிய பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி. அங்கே ஒரு மரத்தைக்கூட வெட்டக்கூடாது. மத்திய அரசாங்கத்தினுடைய சுற்றுச்சூழல் இலாகாவின் கீழ் இருக்கக்கூடிய ஒரு பகுதி. ஆனால் கேரள அரசு எல்லாவற்றையும் மீறி அங்கே புதிய அணையைக் கட்டுவதற்கான feasibility study ஐ பூர்வாங்க ஆய்வுகளையெல்லாம் மரங்களை வெட்டி மண்ணைப் பாழ்படுத்திச் செய்திருப்பதையும், அதை மத்திய அரசு கண்டிக்காததையும் இங்கே வருத்தத்துடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

தமிழகத்திற்கு புதிய அணையிலிருந்து தண்ணீர் தருவோம் என்று கேரளா சொல்வது ஒரு ஏமாற்று வித்தை என்று சொன்னேன். அதற்கு ஆதாரமாகவே கேரள அரசாங்கமே நீதி அரசர் ஆனந்த் அவர்கள் குழுவிடம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு மனுவை அளித்திருக்கின்றார்கள். அந்த மனுவினுடைய 37ம் பக்கத்திலே "முல்லைப் பெரியாறு ஆறு கேரளத்துக்கு மட்டுமே சொந்தமானது ஆகும். இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறு அல்ல. எனவே, அந்த ஆற்று நீரில் தமிழகம் உரிமை கோர முடியாது'' என்றும், அந்த அறிக்கையின் 23ம் பக்கத்தில் "தமிழகத்துக்குத் தண்ணீர் தருவது என்பது கிடைக்கும் நீரின் அளவைப் பொறுத்தே ஆகும்'' எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.  இப்படி தொடர்ச்சியாக, குமரி மாவட்டத்தில் நெய்யாறு இடதுகரை சாணலில் நமக்கு உரிமையுள்ள தண்ணீரைத் தர மறுக்கும் கேரளம், நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய அனுமதி மறுக்கும் கேரளம், கொங்குச்சீமையில் பாம்பாற்றுக்குக் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் கேரளம், நல்லாறு இடமலை ஆறு பிரச்சினையில் வஞ்சகம் செயும் கேரளம், முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் நாசகாரியத்தில்  ஈடுபடாமல் தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கின்றோம் என்பதை நிலைநாட்டக்கூடிய வகையிலே இன்று நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடிய தீர்மானம் அமைந்திருக்கின்றது.

கர்னல் பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் இதனால் கேரளாவில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேரளா அரசு அம்மாநில மக்களிடையே பீதியைக் கிளப்பி வருகின்றது. எனக்கு முன்னர் உரையாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. சு. குணசேகரன் அவர்கள் குறிப்பிட்டதைப் போலத்தான் எழுத்தறிவில் இந்தியாவில் முதன்மையாக விளங்கும் கேரளாவைச் சேர்ந்த மக்கள் இந்த வதந்தியை நம்பி வருவது துரதிருஷ்டவசமானதாகும்.  ஒரு கட்டடம் அல்லது அணை பலமாக இருக்கிறதா என்பதை அறிவியல் ரீதியாகத்தான் சோதனை செய்து ஒரு முடிவைத் தர முடியும். தமிழக பொதுப்பணித் துறையினுடைய முன்னாள் பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஒரு சிறப்பான ஆவண வீடியோ படத்தை தயாரித்திருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை முற்றிலுமாக இடியாது, கற்பனையாக இடிந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அந்த அணையின் முழுநீரும் மதகு வழியாக இடுக்கி அணைக்குத்தான் வருமே தவிர கேரளாவில் உள்ள மூன்று மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள்.

இதில் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். இந்த ஆவணப் படத்திலே நம்முடைய தமிழக பொதுப்பணித் துறையினுடைய முன்னாள் பொறியாளர்கள் சொல்லியிருக்கக்கூடிய கருத்தை கேரள மாநிலத்தினுடைய பேரிடர் மேலாண்மைத் துறையினுடைய செயலாளர், எல்லோருக்கும் பிரபலமாக கேரளா உயர்நீதிமன்றத்திலே அதனுடைய அட்வகேட் ஜெனரல் தண்டபாணி அவர்கள் சொன்ன கருத்துதான் வெளியே தெரிந்திருக்கின்றது. அதே வழக்கில் கேரள மாநிலத்தினுடைய பேரிடர் மேலாண்மைத் துறையினுடைய செயலாளர் ஒரு கருத்தைச் சொல்கின்றார். முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதி-ருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையைச் சென்றடைய 4 மணி நேரமும், செறுதோணி அணைமூலம் அரபிக் கடலைச் சென்றடைய 10 முதல் 12 மணி நேரமும் பிடிக்கும். எனவே, மக்களுக்கு எத்தகைய அபாயமும் ஏற்படாது என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்தச் சூழலே மிகப்பெரிய ஒரு பீதியை கேரள அரசாங்கம் பரப்பிவரக்கூடிய சூழ்நிலையிலே அதற்கான ஒரு திரைப்படமும் டேம் 999 என்ற பெயரிலே வந்திருக்கக்கூடிய நிலையிலே தமிழக அரசுக்கு என்னுடைய கோரிக்கை என்னவென்றால், நம்முடைய தமிழ்நாடு அரசு தமிழக பொதுப்பணித் துறையினுடைய முன்னாள் பொறியாளர்கள் தயாரித்திருக்கக்கூடிய இந்த வீடியோ படம் தமிழிலே வந்திருக்கின்றது. வெறுமனே ஆங்கில சப் டைட்டில் போட்டிருக்கின்றார்கள். அதை முழுமையாக அல்லது அதைவிட இன்னும் மெருகூட்டி சிறப்பான ஒரு ஆவணப் படத்தை ஆங்கிலத்திலே தயாரித்து, நம்முடைய உரிமை நியாயமானது என்பதை இந்திய மக்கள் உணரவைப்பதற்கான பணிகளை நாம் செய்ய வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் நதி நீர் ஆணையத்தின் தலைவர் முனைவர் கே.சி. தாமஸ் அவர்கள் டிசம்பர் 13ல் வெளியான டெக்கான் கிரானிகிள் நாளிதழில், தொழில் நுட்பம் வளர்ந்திராத காலத்தில் 1895ல் கட்டப்பட்ட முல்லைப் பெரியார் அணை 2011லிலும் ஸ்திரமாக நின்றுக் கொண்டிருப்பது அதன் வடிவமைப்பும் கட்டுமான நுட்பமும் வலுவானதாகவும் சிறப்பானதாகவும் இருப்பதற்கு அத்தாட்சியாகும் என்று குறிப்பிட்டிருப்பதோடு அணையை பலப்படுத்தக்கூடிய முயற்சிகள் நவீன கால தரத்திற்கு அந்த அணையை உயர்த்தியுள்ளது எல்லாவகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் அளவிற்கு முல்லைப் பெரியாறு அணை பலமானதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கேரள அரசாங்கத்தினுடைய நடவடிக்கை இந்திய ஒருமைப்பாட்டிற்கு உலைவைக்கும் கொடிய அரசாக கேரளா விளங்குகிறது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. ஏறத்தாழ 10 இலட்சம் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, தமிழகத்தில் 2,17,000 ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காமலும், 85 லட்சம் மக்கள் குடிநீருக்கு வழியில்லாமல் அல்லல்படக்கூடிய ஒரு வேலையைத்தான் கேரள அரசு செய்து வருகிறது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தின் தென்பகுதி காலப்போக்கில் பாலைவனமாக மாற நேரிடும். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இங்கே கொண்டு வந்திருக்கக்கூடிய இந்தத் தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக வரவேற்பதுடன், ஒரே ஒரு கோரிக்கையை நான் இங்கே வைக்க விரும்புகின்றேன்.

மத்திய அரசு மீனவர் பிரச்சினையிலே சரியான முறையிலே அணுகுமுறையை தமிழக மீனவர்களுடைய நலனைக் காப்பாற்றுவதிலே அக்கறை இல்லாமல் இருப்பதுபோல் இல்லாமல் இப்போதுகூட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் மீது ஒரு பொய்வழக்குப் போட்டு, இலங்கைச் சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மீட்பதற்கான உருப்படியான வழியைச் செய்யாதது போலத்தான் இப்போது இந்த முல்லைப் பெரியாறு விஷயத்திலும் இருக்கின்றது. எனவே, சட்டசபையில் உள்ள கட்சிகள் மட்டுமல்லாமல், சட்டப் பேரவைக்கு வெளியில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு குழுவை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலே டெல்லிகுச் சென்று, நம்முடைய கோரிக்கைகளை பிரதமர் அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதற்கும் வழிவகுக்க வேண்டுமென்றுச் சொல்லி இந்தத் தீர்மானத்தை முழுமையாக வரவேற்று அமர்கின்றேன். நன்றி.

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar