
2007 பிப்ரவரி 12. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் என்கிற ரயிலில் வைக்கப்பட்ட குண்டுவெடித்து 68 பேர் பலியாயினர். தில்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அன்றைய பிரதமர் வாஜ்பாய், நல்லெண்ண திட்டமாக விட்ட விரைவு ரயில்தான் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ். இக்குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம் இளைஞர்கள்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்புப் படை (ATS) தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேயின் புலனாய்வு காரணமாக மக்கா மஸ்ஜித் (ஹைதராபாத்), அஜ்மீர் தர்கா (ராஜஸ்தான்), மலேகான் (மகாராஷ்ட்ரம்) குண்டுவெடிப்புகளில் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பிலும் அவர்களுக்குத் தொடர்பிருந்தது கண்டறியப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் அரசு அமைத்த, தேசியப்புலனாய்வு நிறுவனம் (NIA) தற்போது விசாரணையைத் தொடர்ந்து வருகிறது. இந்நிறுவனம், தற்போது, கமல் சவ்கான் என்பவரைக் கைது செய்திருக்கிறது. சவ்கான், ரயில் குண்டுவெடிப்பின் இரண்டாம் நிலை குற்றவாளி என்று புலனாய்வு நிறுவனம் கூறுகிறது. சவ்கானிடம் நடத்தப்படும் விசாரணையைக் கொண்டு மீதமான குற்றவாளிகளையும் பிடித்துவிட முடியும் என்று நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறது.
மத்தியப் பிரதேசம் மவ் (MHOW) ஊரைச் சேர்ந்த கமல் சவ்கான், ரயிலில் குண்டுவைத்த நான்கு பேரில் ஒருவர் என்று என்.ஐ.ஏ. கூறுகிறது.
ஏற்கனவே 2010 ஜூனில், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவது தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கெடுத்ததாக லோகேஷ் சர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலும் இவர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
தலைமறைவாக இருக்கும் சந்தீப் டாங்கே எனும் ஆர்எஸ்எஸ் தலைவர்தான் 2002 முதல் தொடர்ந்து நடந்த இந்துத்துவ பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கு காரணம் என்று என்.ஐ.ஏ. நம்புகிறது.
டாங்கேயின் தளபதியாக செயல்பட்ட ராமச்சந்திர கல்சங்கராவுக்கும் இவ்வழக்கில் தொடர்புள்ளதாக சொல்லப்படுகிறது. இவரும் ஒரு ஆர்எஸ்எஸ்காரர். ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த, குஜராத்தைச் சேர்ந்த ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரம் என்ற அமைப்பின் தலைவர் நபாகுமார் சர்காரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரயில் குண்டுவெடிப்பு தொடர்பில் மேலதிகத்தகவல்கள் கிடைத்துள்ளதாம்.
2010 டிசம்பரில், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நபாகுமார் சர்கார் அளித்த வாக்குமூலத்தில், ரயில் குண்டுவெடிப்பு மற்றும் பிற தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பாக, ஜூன் 2006ல் நடந்த கூட்டத்தில், தான் கலந்துகொண்டதாக ஒப்புக்கொண்டிருந்தார். குண்டுவெடிப்புகள் தொடர்பான கருத்தை டாங்கே உருவாக்கியதாக அவர் தெரிவித்திருந்தார். பின்னர், மிரட்டல் காரணமாக, உயிர்பயத்தால் தான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறி தனது ஒப்புதலை மறுத்தார்.
2007ல் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹர்சத் சோலங்கிக்கு, 2002 குஜராத் படுகொலைகளில் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், அவர் தலைமறைவாக டாங்கே உதவியதாகவும் என்.ஐ.ஏ. நம்புகிறது.
காந்தியைப் படுகொலை செய்த ஆர்எஸ்எஸ், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான குண்டுவெடிப்புகளையும், படுகொலைகளையும் நடத்திவருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்கும், தேசிய அமைதிக்கும் அது அவசியமாகும்.
No comments:
Post a Comment